முதலில் ஆடிய கென்யா 50 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய கனடா 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
முதலில் பேட் செய்த கென்ய அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே அவ்மாவின் விக்கெட்டை இழந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வாட்டர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு களம் புகுந்த சி. ஒபுயா அதிரடியாக விளையாடி 1 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டி.ஒபுயா 2, டிக்கோலோ 12 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 5 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது கென்யா.
பின்னர் ஜோடி சேர்ந்த மிஸ்ராவும், கேப்டன் கமான்டேவும் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். கமான்டே 22 ரன்களில் ஆட்டமிழக்க, ஓடோயோ களம் புகுந்தார்.
மிஸ்ரா சிறப்பாக ஆடி அரைசதமடிக்க அந்த அணி 39.3 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது. மிஸ்ரா 51 ரன்களில் ஆட்டமிழக்க, மீண்டும் சரிந்தது கென்யா.
50-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஓடோயோ 51 ரன்களில் ஆட்டமிழக்க கென்யாவின் ஆட்டம் 198 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
கனடா தரப்பில் ஒசின்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.
199 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது கனடா. ரிஸ்வான் சீமா, குணசேகரா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே சீமா அதிரடியாக விளையாடினார். 13 பந்துகளை சந்தித்த அவர், 1 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஒட்டினோ பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த சர்க்காரி 10 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அணியின் ஸ்கோர் 48 ரன்களை எட்டியபோது நிதானமாக ஆடிய குணசேகரா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் பகாயும், ஹன்ஸ்ராவும் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹன்ஸ்ரா 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
இறுதியில் அந்த அணி 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
பகாய் 64 ரன்களுடனும், டேவிசன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஒசின்டே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்
No comments:
Post a Comment